பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக தீர்மானம்

வெள்ளி, 5 டிசம்பர் 2008 (17:50 IST)
மும்பை தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவிற்கு உதவுவது, பிரிட்டன் மண்ணில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படாது என அந்நாட்டு பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்நாட்டு பொதுச் சபையில், மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கான கூட்டம் நேற்று மாலை நடந்தது. தொழிலாளர் கட்சி உறுப்பினர் வீரேந்திர குமார் ஷர்மா இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

கூட்டத்தில் அய‌ல்நாடுவாழ் இந்திய தொழிலதிபரான ஸ்வரஜ் பால், பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் ஷிவ் சங்கர் முகர்ஜி, முன்னாள் அமைச்சர் கேய்த் வாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, வீரேந்திர குமார் ஷர்மா இந்தியாவுக்கு ஆதரவான தீர்மானத்தை 6 உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுச் சபைக்கு கொண்டு வந்தார். எனினும் அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதல்கள் இந்தியாவின் ஜனநாயகம், ஒற்றுமை, மக்களின் நம்பிக்கை, மதச்சார்பின்மை ஆகியவற்றை குலைக்கும் நோக்கில் நடத்தப்பட்டது என்றும், ஜனநாயகத்தின் மீது உலகம் முழுவதும் வைத்துள்ள மதிப்பை குறைக்கும் விதமாக உள்ளது என்றும் இச்சபை நம்புவதாக அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இனி இதுபோன்றதொரு தாக்குதல் இந்தியாவின் மீது நடத்தப்படாமல் இருக்கவும், மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்களை இந்திய சட்டத்தின் முன் நிறுத்தவும் பிரிட்டன் துணைபுரியும் என்றும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய அய‌‌ல்நாடு வர்த்தகத்திற்கான பிரிட்டன் தூதர் லார்டு பால் பேசுகையில், காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டமைப்பின் சார்பில் மும்பை தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இந்திய, பாகிஸ்தான் நாடாளுமன்ற தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.

இப்பிரச்சனையில் இந்தியாவுக்கு உதவுவதாக பிரதமர் கோர்டோன் பிரவுன் உறுதியளித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், மும்பைத் தாக்குதலில் உயிரிழந்த தேசிய பாதுகாப்புப் படையினர், மக்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்