தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சர்வதேச விமான நிலையம் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. விமானப் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து பிரதமர் சோம்சாய் வோங்ஸ்வாட் பதவி விலக வலியுறுத்தி, ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டணி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாங்காக்கில் உள்ள ஸ்வர்ணபூமி சர்வதேச விமானநிலையத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். இதன் காரணமாக அந்த விமான நிலையத்தில் போக்குவரத்து முடக்கப்பட்டது.
இதற்கிடையில் கடந்த செவ்வாய்கிழமை அந்நாட்டு நீதிமன்றம் பிரதமர் சோம்சாய் வோங்ஸ்வாட்டை பதவியில் இருந்து நீக்கியதுடன், ஆளும் கட்சியின் ஆட்சியையும் கலைப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஸ்வர்ணபூமி விமான நிலைய முற்றுகை இன்று கைவிடப்பட்டது.
இதுகுறித்து தாய்லாந்து விமானநிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஸ்வர்ணபூமி விமான நிலையம் வழக்கம் போல் இயங்கத் துவங்கி விட்டது என்றார்.
விமானநிலையம் வழக்கம் போல் செயல்படுவதை உணர்த்தும் விதமாக காலை 11 மணியளவில் பொம்மலாட்டமும், பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.