மும்பை தாக்குதலில் பிடிபட்டவரிடம் அமெரிக்கா விசாரிக்கலாம்: யு.எஸ். அட்டர்னி ஜெனரல்

வியாழன், 4 டிசம்பர் 2008 (17:47 IST)
வாஷிங்டன்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளதால், அதில் ஈடுபட்ட அஜ்மல் அமிர் கசாவிடம் விசாரணை நடத்த அமெரிக்காவுக்கு உரிமை உண்டு என அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் மைக்கேல் முகாசே கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் அஜ்மலிடம் விசாரணை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதா என்பது குறித்த விவரத்தை அவர் குறிப்பிடவில்லை.

புதிய அதிபர் பதவியேற்பு விழா அல்லது அதற்கு முன்பாக பயங்கரவாதிகள் அமெரிக்காவைக் குறி வைத்து தாக்குதல் நடத்தலாம் என்ற செய்திகளை அவர் மறுத்துவிட்டார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், பயங்கரவாதிகள் தக்க சமயத்திற்காக காத்திருந்து தாக்குதல் நடத்துவர். அரசியல் நிகழ்வுகளின் போது அல்ல என்றார்.

கடந்த நவம்பர் 20ஆம் தேதியின் போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது உடல்நலக் குறைவால் அவதியுற்ற முகாசே, நேற்றைய சந்திப்பின் போது பூரண உடல் நலத்துடன் காணப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்