மும்பை தாக்குதல்: யு.எஸ். அதிகாரிகளுடன் மேனன் ஆலோசனை

புதன், 3 டிசம்பர் 2008 (12:39 IST)
அமெரிக்கசென்றுள்ள இந்திய அயலுறவு செயலர் சிவசங்கர் மேனன், அந்நாட்டு அதிகாரிகளுடன் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள சிவசங்கர் மேனன், அ‌ந்நாட்டின் அயலுறவு துணை செயலர் ஜான் நெக்ரோபான்டே, அரசியல் விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாத எதிர்ப்பில் கூட்டு நடவடிக்கை, அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், பாதுகாப்புத்துறை வர்த்தகம், விண்வெளி கூட்டு ஒத்துழைப்பு, எதிர்கால பொருளாதார, முதலீட்டு சாத்தியங்கள் உட்பட பல்வேறு இருதரப்பு விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சிவசங்கர் மேனனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க நாடாளுமன்றத்தின் தலைவர் நான்ஸி பெலோஸி, மும்பை தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

மேலும், அந்நாட்டு செனட் உறுப்பினர் ஜான் கெர்ரியுடனும் சிவசங்கர் மேனன் பேசியுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவசங்கர் மேனனின் அமெரிக்கப் பயணம் மும்பை தாக்குதல்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்பயணத்திற்கு முன்பாக மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதால், இப்பயணத்தின் போது பயங்கரவாதம் முக்கிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்