கூட்டுப் புலனாய்வு நடத்தத் தயார்: பாகிஸ்தான்!
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (19:26 IST)
மும்பையில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இந்தியாவுடன் இணைந்து கூட்டுப் புலனாய்வு நடத்தத் தயார் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி அரசுத் தொலைக்காட்சியில் ஆற்றியுள்ள உரையில், "மும்பையில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களுக்கு எந்தவித நியாமும் கற்பிக்க முடியாது. இதற்குப் பின்னால் உள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இந்தியாவுடன் இணைந்து கூட்டுப் புலனாய்வு நடத்தத் தயார்." என்றார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் இந்தியாவிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என்ற அவர், மசூத் அசார் (ஜெய்ஸ் ஈ மொஹம்மது இயக்கத் தலைவன்), ஹஃபீஸ் மொஹம்மது சையத் (லஸ்கர் ஈ தயீபா தலைவன்), தாவூத் இப்ராஹீம் (மும்பை நிழல் உலக தாதா) ஆகியோர் உள்ளிட்ட 20 பயங்கரவாதிகளைக் கைது செய்து ஒப்படைப்பது குறித்து எதையும் தெரிவிக்கவில்லை.
பயங்கரவாதம் ஒரு மிகப்பெரிய சவால் என்று குறிப்பிட்ட ஷா மெஹ்மூத் குரேஷி, கூட்டு நடவடிக்கைகளால் முறியடிக்கப்பட வேண்டிய பொது எதிரி அது என்றார்.
இரண்டு நாடுகளும் சிக்கலான சூழலை எதிர்கொண்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், இந்த நேரத்தில் இரண்டு தரப்பினரும் பொறுமையாகவும், கவனமாகவும், சகிப்புத்தன்மையுடனும், ஒருவர் மீது ஒருவர் பழி சொல்வதைத் தவிர்த்தும் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.
"தற்போதைய சூழலில் பொறுப்பில்லாமல் செயல்பட எந்தத் தரப்பையும் அனுமதிக்க முடியாது. ஆதாரமில்லாமல் பழி சொல்வதையோ, விரல் நீட்டிக் குற்றம்சாற்றுவதையோ அனுமதிக்கக் கூடாது" என்று அழுத்தமான தொனியில் வலியுறுத்திய குரேஷி, "இந்தியாவுடன் நல்லுறவுகளைத் தொடரவே பாகிஸ்தான் விரும்புகிறது. அதற்கேற்றவாறு பொறுப்புடன் செயல்படுவோம்." என்றார்.