காண்டலீசா ரைஸ் மும்பைக்கு செல்ல மாட்டார்: யு.எஸ்.

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (12:55 IST)
மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆலோசனை நடத்த இந்தியாவுக்கு வரும் அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், தாக்குதல் நடந்த இடத்திற்கோ, பாகிஸ்தானுக்கோ செல்ல மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அரசின் துணை செய்தி தொடர்பாளர் ராபர்ட் வுட்ஸ் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ரைஸின் இந்தியப் பயண நிகழ்ச்சி நிரல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இப்பயணத்தின் போது இந்திய அதிகாரிகளை சந்திக்கும் அவர், மும்பை தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் அமெரிக்காவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வார்.

எனினும், அவர் எந்தெந்த இந்திய அதிகாரிகளை சந்திப்பார் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான மும்பைக்கு காண்டலீசா செல்ல மாட்டார” என்றார்.

இந்தியாவுக்கு செல்லும் அவர் பாகிஸ்தானுக்கும் பயணம் மேற்கொள்வாரா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தற்போது இந்தியாவைத் தவிர வேறு எந்தப் பயணமும் மேற்கொள்ள அவர் திட்டமிடவில்லை. இதில் மாற்றம் இருந்தால் உடனடியாகத் தெரிவிப்போம் என பதிலளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்