மும்பை தாக்குதல்: அமெரிக்கா 2 முறை எச்சரித்தது

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (12:33 IST)
மும்பைக்கு கடல் மார்க்கமாக வரும் பயங்கரவாதிகள் அங்கு கொலை வெறித் தாக்குதல் நடத்தலாம் என ஒரு மாதத்திற்கு முன்பாகவே அமெரிக்க புலனாய்வுத்துறை இந்தியாவிடம் எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக சி.என்.என் வெளியிட்டுள்ள செய்தியில், மும்பையில் தாக்குதல் நடப்பதற்கு ஒரு மாதம் முன்பாகவே அதற்கான சாத்தியங்கள் உள்ளதை இந்திய அரசிடம் தெரிவித்தோம் என அமெரிக்க பயங்கரவாத தடுப்புப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த எச்சரிக்கை ஒருமுறை அல்ல இருமுறை வழங்கப்பட்டது என்றும், பயங்கரவாதக் கும்பல் கடல் மார்க்கமாகவே மும்பைக்குள் ஊடுருவும் என்றும் இந்திய அரசிடம் கூறப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதல் குறித்து சர்வதேச அளவில் விசாரணை துவக்கப்பட்டுள்ளதால், தனது பெயர் மற்றும் அடையாளத்தை தெரிவிக்க அந்த அலுவலர் மறுத்துவிட்டார்.

இதற்கிடையில், ஏபிசி நியூஸ்.காம் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அமெரிக்க உளவு நிறுவன தகவலில் பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என அஞ்சப்படும் இடங்களின் பட்டியல் வழங்கப்பட்டதாகவும், இதில் தாக்குதலுக்கு உள்ளான தாஜ்மஹால் நட்சத்திர விடுதியும் இடம்பெற்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த நவம்பர் 18ஆம் தேதி பாகிஸ்தானுக்கு (லஷ்கர்-ஈ-தயீபா தலைவர் பயன்படுத்தும் தொலைபேசி நம்பருக்கு) மேற்கொள்ளப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசி அழைப்பை இடைமறித்து இந்திய உளவுத்துறை கேட்டதாகவும், அதில் பேசப்பட்ட தகவல்கள் மும்பை தாக்குதலுக்கு தொடர்புடையதாக இருந்திருக்கலாம் என தற்போது சந்தேகிப்பதாகவும் உளவுத்துறை அதிகாரிகள் தற்போது கூறியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்