நேபாளம் சென்றடைந்தார் அமைச்சர் பிரணாப் முகர்ஜி!

திங்கள், 24 நவம்பர் 2008 (17:23 IST)
இந்தியா-நேபாளம் இடையிலான வணிகம், போக்குவரத்து, எல்லை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்க இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேபாளம் சென்றுள்ளார்.

மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இன்று நேபாளம் சென்றுள்ள பிரணாப் முகர்ஜி, அந்நாட்டு குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ், குடியரசுத் துணைத் தலைவர் பர்மநந்தா ஜா, பிரதமர் பிரச்சண்டா, அயலுறவு அமைச்சர் உபேந்திரா யாத, நேபாள காங்கிரஸ் தலைவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா ஆகியோரை சந்தித்துப் பேசுவார் என இந்திய அயலுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேபாள அயலுறவு அமைச்சர் உபேந்திரா, இன்றிரவு அளிக்கும் சிறப்பு விருந்து நிகழ்ச்சியிலும் பிரணாப் முகர்ஜி பங்கேற்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்து நேபாளம் ஜனநாயக பாதைக்கு திரும்பிய பின்னர் அந்நாட்டிற்கு செல்லும் முதல் இந்தியத் தலைவர் பிரணாப் முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.