வியட்நாம், இந்தோனேஷியாவுக்கு பிரதீபா 9 நாள் பயணம்!
திங்கள், 24 நவம்பர் 2008 (15:16 IST)
வியட்நாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு 9 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று புதுடெல்லியில் இருந்து புறப்பட்டார்.
இதன் மூலம் வியட்நாம் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் 3வது இந்திய குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பிரதீபா பெற்றுள்ளார். பிரதீபாவுக்கு முன்பாக கடந்த 1959ஆம் ஆண்டு டாக்டர் ராஜேந்திர பிரசாத், 1991ஆம் ஆண்டு ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் குடியரசுத் தலைவராக இருந்த போது வியட்நாம் நாட்டிற்கு சென்றனர்.
இப்பயணத்தில் பிரதீபாவுடன் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கமல்நாத், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரிபாவ் ஜவாலே, ருபாப் அகதா சங்மா ஆகியோரும் சென்றுள்ளனர்.
இப்பயணத்தின் போது முதலில் வியட்நாம் நாட்டின் ஹோச்சி-மின் நகருக்கு செல்லும் குடியரசுத் தலைவர், நவம்பர் 26ஆம் தேதி ஹனோய் நகருக்கு செல்லுவார். அங்கு 2 நாட்கள் தங்கும் பிரதீபா வியட்நாம் குடியரசுத் தலைவர் நுயென் மின்ஹ் ட்ரெய்ட், பிரதமர் நுயென் டான்-டுங் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.
பின்னர் இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு நவம்பர் 28ஆம் தேதி செல்லும் பிரதீபா, அங்கிருந்து நவம்பர் 30ஆம் தேதி ஜகர்த்தா செல்கிறார். பின்னர் டிசம்பர் 4ஆம் தேதி நாடு திரும்ப உள்ளார்
ஆசியான் நாடுகளில் அதிவேகமாக வளர்ந்து வரும் வியட்நாம், இந்தோனேஷியா உடனான இந்தியாவின் நட்புறவை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் பிரதீபா பயணம் மேற்கொண்டுள்ளார்.