அகமதிநிஜாத்தை கொல்லவும் தயங்க மாட்டோம்: இஸ்ரேல் தலைவர்!

திங்கள், 24 நவம்பர் 2008 (10:59 IST)
ஈரானின் அணு சக்தி திட்டங்களை தடுக்க அந்நாட்டு அதிபர் மஹ்மூத் அகமதி நிஜாத்தை கொலை செய்யவும் இஸ்ரேல் தயங்காது என அந்நாட்டின் முன்னாள் உயரதிகாரியும், லிகுட் கட்சி வெற்றி பெற்றால் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுபவருமான மோஷி யாலுன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக “தி சிட்னி மார்னிங் ஹெரால்ட” என்ற நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஈரானுக்கு எதிரான கிளர்ச்சியை உடனடியாகத் துவங்க திட்டமிட்டுள்ளோம். மத்திய கிழக்குப் பகுதியில் ஈரான் அரசை வீழ்த்தாமல் நிலைத்தன்மையை ஏற்படுத்த முடியாது. ஈரானின் அணு சக்தி திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

ஈரானை வெல்ல அகமதி நிஜாத் மற்றும் அந்நாட்டுத் தலைவர்களை ராணுவப் புரட்சி மூலம் பதவியில் இருந்து விலக்குவது உள்ளிட்ட செயல்களில் இஸ்ரேல் ஈடுபடுமா என்று கேட்தற்கு, அகமது நிஜாத்தை கொலை செய்வது உட்பட அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் இஸ்ரேல் இறங்கும் என அவர் பதிலளித்தார்.

மேலும், ஈரான் மீது நடத்தப்படும் ராணுவத் தாக்குதல்களுக்கு எகிப்து, சவுதி அரேபியா, ஜோர்டான், வளைகுடா நாடுகள் ஆதரவு அளிக்கும் என்றும் மோஷி யாலுன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்