இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.8 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 11 மணியளவில் சுமத்ரா தீவின் பெங்குலு நகருக்கு தென்மேற்கே 164 கி.மீ தொலைவில், பூமிக்கடியில் 26 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட 10 நிமிடங்களில் மீண்டும் ஒரு மிதமான நிலநடுக்கம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளது.
இன்றும் நிலநடுக்கம்: இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணியளவில் பின் அதிர்வுகள் காரணமாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவானதாக இந்தோனேஷிய தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த தொடர் நிலநடுக்கம் காரணமாக பெரும் பொருட்சேதம் அல்லது உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும், குறிப்பிட்ட ஒருசில உள்ளூர் பகுதிகளில் மட்டும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.