அமெரிக்காவில் ஆந்திர இளம் பெண் தற்கொலை!

அமெரிக்காவில் வசித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆந்திராவின் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஷ்மா (வயது 22). அவரது கணவர் கோலி சுரேஷ் பாபு மென்பொருள் வல்லுனராக பணியாற்றி வருகிறார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நார்த்ரிட்ஜ் பகுதியில் வசித்து வந்த சுஷ்மா, நேற்று மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

நேற்று முன்தினம் (வியாழன்), ஹிமாயாநகரில் உள்ள தாய் பாக்யலட்சுமியிடம் சுஷ்மா தொலைபேசியில் பேசியுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சுஷ்மாவின் தந்தை கனகராஜு கூறுகையில், கடந்த முறை தொலைபேசியில் தாயிடம் பேசியபோது கூட சுஷ்மா எந்த பிரச்சனை குறித்தும் பேசவில்லை. இந்நிலையில், நேற்று அவள் உயிரிழந்ததாக செய்தி வந்துள்ளது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு யார் காரணம் என்றே யூகிக்க முடியவில்லை என்றார்.

அவரிடம் தொடர்ந்து நடத்திய உரையாடலில், தனது மருமகன் சுரேஷ் பாபு மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார். சுஷ்மா இறந்தது குறித்த தகவல் கிடைத்தவுடன் சுரேஷை தொடர்பு கொள்ள கடுமையாக முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றார்.

பொறியியல் பட்டம் பெற்றவரான சுஷ்மாவுக்கு, சுரேஷுக்கும் கடந்த 2007இல் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து 2007 ஆகஸ்ட் மாதம் சுஷ்மா அமெரிக்கா சென்றார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி அவரது உறவினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுஷ்மாவின் உறவினர் ஒருவர் கூறுகையில், சுஷ்மா தற்கொலை செய்து கொல்ல எந்தப் பிரச்சனையும் அவளுக்கு ஏற்படவில்லை. அவர் நிச்சயம் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என அவர் சந்தேகம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்