வெனிசூலாவில் சூறாவளிக்கு 9 பேர் பலி!

சனி, 22 நவம்பர் 2008 (13:44 IST)
வெனிசூலாவில் சூறாவளியால், கனமழைக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல்கள் நாளை நடைபெற உள்ள நிலையில் அங்கு கனமழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டின் தலைநகர் கராகஸில் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு நபர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அவரது நிலை குறித்து தகவல் இல்லை. சுமார் 73 வீடுகள் சேதமடைந்துள்ளதாக வென்சூலா உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஜுலியா மாநிலத்தில் 17 வயது கர்ப்பிணிப் பெண்ணும், அவரது தம்பியும் உயிரிழந்துள்ளனர். நாட்டின் பிற பகுதிகளில் கனமழைக்கு 2 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ருஜில்லோ பகுதியில் 2 பாலங்கள் இடிந்துள்ளன.

பொதுவாக வெனிசூலாவில் அக்டோபர் மாத இறுதியில் நின்றுவிடும் பருவமழை, இந்தாண்டு நவம்பரிலும் தொடர்ந்து பெய்து வருகிறது.

இதற்கிடையில், அந்நாட்டின் 22 ஆளுநர்கள், 328 நகர மேயர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (ஞாயிறு) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்