இந்தியாவுடன் எல்லைப் பிரச்சனை: சீனா தலையிட நேபாளம் வேண்டுகோள்?

வெள்ளி, 21 நவம்பர் 2008 (17:57 IST)
இந்திய-நேபாள எல்லையில் உள்ள காலாபானி என்ற பகுதி யாருடையது என்ற பிரச்சனையை தீர்க்க சீனா உதவிட வேண்டும் என நேபாளம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டில் வெளியாகும் கன்டிப்பூர் டெய்லி என்ற நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில், இந்தியா-சீனா-நேபாளம் ஆகிய நாடுகள் முத்தரப்பு பேச்சு நடத்தினால் காலாபானி எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என நேபாளம் வந்த சீன ராணுவ அதிகாரிகள் குழுவின் தலைவரிடம் அந்நாட்டு துணைப் பிரதமர் பம்தேவ் கௌதம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம், நேபாளத்தின் தர்சுலா மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக திகழ்ந்து வரும் 75 சதுர கி.மீ பரப்பளவுள்ள காலாபானி பகுதி கடந்த 1962ஆம் ஆண்டு நடந்த இந்திய-சீனப் போருக்குப் பின்னர் இந்தியாவின் கட்டுப்பாடில் உள்ளதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

சீன ராணுவ அதிகாரிகள் குழுவுடன் எல்லைப் பிரச்சனை குறித்து பேசப்பட்டது எனத் தெரிவித்துள்ள நேபாள உள்துறை செயலர் கோபிந்த குசும், இதுதொடர்பான அனைத்து விவகாரங்களையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறியதாக அந்நாளிதழ் கூறியுள்ளது.

எல்லைப்பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்திய-நேபாள கூட்டு தொழில்நுட்பக் குழு தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், 3 நாடுகளின் எல்லைப் பகுதியான காலாபானி தொடர்பான பிரச்சனையில் சீனாவை இணைத்துக் கொள்ள வேண்டும் என நேபாளம் சார்பில் இந்தியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்ட என்றும் அந்த நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ராம் பஹதூரையும் சீன ராணுவ அதிகாரிகள் குழு சந்தித்ததாகவும், அப்போது எல்லைப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் விவாதித்ததாகவும் கன்டிப்பூர் நாளிதழ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேபாள உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரை பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தொடர்பு கொண்டு கேட்ட போது, சீன ராணுவ அதிகாரிகள் குழுவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமான ஒன்றுதான், இதில் இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனைகள் குறித்து பேசப்படவில்லை என மறுப்பு தெரிவித்தார்.

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த நேபாள அயலுறவு அமைச்சர் உபேந்திரா யாதவ், இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கவனத்திற்கு காலாபானி, சுஸ்டா எல்லைப் பிரச்சனைகளை எடுத்துச் சென்றதையும் அந்நாளிதழ் நினைவு கூர்ந்துள்ளது.

வரும் 24ஆம் தேதி பிரணாப் முகர்ஜி நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது இப்பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்