ஹஜ் யாத்திரைக்கு 5 லட்சம் பேர் வருகை: இந்தியர்கள் 31 ஆயிரம்!
வெள்ளி, 21 நவம்பர் 2008 (13:30 IST)
மெக்காவில் உள்ள புனித மசூதியில் தொழுகை நடத்தவும், இறைவன் விதித்த கட்டளைகளில் ஒன்றை நிறைவேற்றவும் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ள பயணிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்ட உள்ளதாக ஹஜ் கூட்டமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
செவ்வாய் மதியம் வரையிலான கணக்கெடுப்பின்படி, மொத்தம் 4 லட்சத்து 24 ஆயிரத்து 14 பேர் மதினா வந்துள்ளனர். இதில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 296 பேர் மெக்கா சென்று விட்டனர்.
அதிகளவு பயணிகளைக் கொண்ட நாடுகளில் இந்தோனேஷியா (57,591) முதலிடத்தையும், பாகிஸ்தான் (32,754) இரண்டாம் இடத்தையும், இந்தியா (30,930) மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
மதினாவில் உள்ள பிரின்ஸ் முகமது சர்வதேச விமான நிலையத்திற்கு இதுவரை 63 ஹஜ் விமானங்கள் வந்துள்ளதாகவும், மதினா வந்த பயணிகளை பிற நகரங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 488 பேருந்துகளில், 356 பேருந்துகள் மெக்கா செல்வதாகவும் ஹஜ் கூட்டமைப்பு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.