ஒபாமா தலைமையில் இந்திய-யு.எஸ் நட்புறவு தொடரும்: புஷ் அரசு!

புதன், 19 நவம்பர் 2008 (11:55 IST)
இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவை புதிதாக அமையும் ஒபாமா அரச தொடர்ந்து வலுப்படுத்தும் எனத் நம்பிக்கை தெரிவித்துள்ள புஷ் அரசு, இதில் அணு சக்தி ஒப்பந்தமும் அடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டனா பெரினோவிடம், இரு நாடுகளிடையே கையெழுத்தான அணு சக்தி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ள நிலையில் அதிபர் புஷ் பதவிக்காலம் முடிவதால், புதிய அதிபராக பதவியேற்கும் ஒபாமா இவ்விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுப்பார் என கேட்கப்பட்டது.

இந்தியாவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தைத் தொடர வேண்டுமா என்பது பற்றி புதிய அரசுதான் இறுதி முடிவு செய்ய வேண்டும். ஆனால் ஒப்பந்தத்தை அவர்கள் (ஒபாமா அரசு) ரத்து செய்வதற்கு எந்த வலுவான காரணங்களும் இல்லை என நான் கருதுகிறேன் என பதிலளித்தார்.

முன்னதாக அதிபர் ஒபாமாவால், ஜி-20 மாநாட்டுக்கு வரும் அயல்நாட்டு அதிகாரிகளை சந்தித்துப் பேசுவதற்காக தேர்வு செய்யப்பட்ட மடேலைன் ஆல்பர்ட், இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்பெறச் செய்ய கூடுதல் முக்கியத்துவம் தரப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் கடந்த வாரம் நடந்து முடிந்த ஜி-20 மாநாட்டிற்கு பிரதமர் மன்மோகன் சிங்குடன் சென்ற திட்டக் கமிஷன் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவைச் சந்தித்துப் பேசிய மடேலைன் ஆல்பர்ட் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி, பொருளாதார நெருக்கடி குறித்தும், இருதரப்பு உறவுகள் குறித்தும் விவாதித்தாக இந்தியத் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்