நெடுந்தொலைவு விண்வெளி தகவல் தொடர்பு வலைப்பின்னல்! நாஸா சோதனை வெற்றி!
புதன், 19 நவம்பர் 2008 (11:55 IST)
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா நெடுந்தொலைவு விண்வெளி தகவல்தொடர்பு வலைப்பின்னலை இணையதள மாதிரியில் உருவாக்கி அதனை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
டீ.டி.என் (DTN) என்று அழைக்கப்படும் இடையூறு தடுப்பு வலைப்பின்னலாக்கம் (Disruption Tolerence Networking- DTN) என்ற மென்பொருளை உருவாக்கி கிரகங்களுக்கு இடையேயான இணையதளம் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 20 மில்லியன் மைல்கள் தொலைவில் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் நாஸா விண்வெளிக்கலத்திலிருந்தும், கலத்திற்கும் விண்வெளி பிம்பங்களை பரிமாற்றம் செய்ய இந்த மென்பொருள் உதவுகிறது.
ஒரு ஒட்டுமொத்த விண்வெளி புதிய தகவல்தொடர்புத் திறன் (new space communication capability) அதாவது கிரகங்களுக்கு இடையேயான ஒரு இணையதள அமைப்பை (Interplanetary Internet) உருவாக்குவதில் இது முதல் கட்டம் என்று நாஸா விஞ்ஞானி அட்ரியன் ஹூக் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் துணைத்தலைவர் வின்ட் செர்ஃப், நாஸாவுடன் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளனர்.
அதாவது ஒரு சாதாரண இணையதளம் தகவலை அனுப்பும் முறையிலிருந்து இது வேறுபட்டது.
இந்த கிரகங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு வலைப்பின்னல் அமைப்பு, தாமதங்கள், இடையூறுகள் அல்லது விண்வெளியில் ஏற்படும் இணைப்புத் துண்டிப்புகள் ஆகியவற்றையும் மீறி பிம்பங்களை அனுப்பவல்லது. உதாரணமாக ஒரு கிரகத்திற்கு பின்புறம் ஒரு விண்கலம் நகர்கிறது என்றாலோ, சூரியப் புயல்கள் போன்றவற்றாலோ தகவல் பரிமாற்றத்தில் கடுமையான தாமதம் ஏற்படும்.
அதாவது செவ்வாய் கிரகத்திற்கு தகவல் அனுப்புவதில் அல்லது அதிலிருது தகவல் பெறுவதற்கு ஒளியின் வேகத்தில் மூன்றரை நிமிடங்களிலிருந்து 20 நிமிடம் வரை காலதாமதம் ஏற்படும்.
பூமியில் செயல்படும் இணையதள தகவல் பரிமாற்றம் போல் அல்லாமல், இந்த டீ.டி.என் தொழில் நுட்பம் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு தொடர்ச்சியான இணைப்பை முன் அனுமானித்துக் கொள்வதில்லை. மாறாக தகவல் போய்ச் சேர வேண்டிய இடத்தை அது கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், தரவுகள் இழப்பு ஏற்படாது. இதில் ஒவ்வொரு வலைப்பின்னல் கணுவும் மற்றொரு கணுவிற்கு தகவல் அனுப்பும் வரை அந்த தரவுகளை பத்திரமாக வைத்திருக்கும்.