செனட் பதவியை ராஜினாமா செய்தார் ஒபாமா!

செவ்வாய், 18 நவம்பர் 2008 (13:18 IST)
அமெரிக்காவின் புதிய அதிபராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா, தனது செனட் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் தேதி அந்நாட்டு அதிபராக முறைப்படி பொறுப்பேற்கும் அவர், தனது அரசின் கீழ் பணியாற்றவுள்ள முக்கிய அதிகாரிகளை தேர்வு செய்யும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தவே அவர் தனது செனட் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லினியாஸ் தொகுதியின் செனட் உறுப்பினராக பதவி வகித்த ஒபாமா, தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும் செனட் சபைக்கு முறைப்படி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக இல்லினியாஸ் பகுதியில் நாளிதழில் வெளியான செய்தியில், இல்லினியாஸ் தொகுதி மக்களை என்றும் மறக்க மாட்டேன். என்னை சமூகப் பணியில் ஈடுபட வைத்த இத்தொகுதி ஆண்களுக்கும், பெண்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

அடுத்த பயணத்தை (அதிபர்) தொடருவதற்காக தற்போது செய்து வரும் பயணத்தை (இல்லினியாஸ் செனட் உறுப்பினர்) முடித்துக் கொள்கிறேன் என்றும் ஒபாமா தனது செய்தியில் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

ஒபாமா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்தாண்டு இறுதிக்குள் அங்கு புதிய செனட் உறுப்பினர் நியமிக்கப்படுவார் என இல்லினியாஸ் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்