சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைந்தது என்டோவர்!

திங்கள், 17 நவம்பர் 2008 (16:01 IST)
அமெரிக்காவின் கென்னடி ஏவுதளத்தில் இருந்து கடந்த வெள்ளியன்று விண்ணில் ஏவப்பட்ட எண்டோவர் விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்துடன் இன்று அதிகாலை வெற்றிகரமாக இணைந்தது.

இந்திய நேரப்படி அதிகாலை 3.31 மணிக்கு (திட்டமிட்டதை விட 3 நிமிடங்கள் முன்பாக) விண்வெளியில் உள்ள மிதக்கும் ஆய்வுக்கூடத்துடன் என்டோவர் இணைந்ததாக நாசா தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.

என்டோவர் விண்கலத்தில் சென்ற 7 விண்வெளி வீரர்களும், இணைப்பு பாதை வழியாக மிதக்கும் ஆய்வுக்கூடத்துக்குள் நுழைந்தனர். ஏற்கனவே விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்த வீரர்கள், அவர்களை கட்டித்தழுவி வரவேற்றனர்.

விண்வெளி மையத்துடன் இணைக்கப்படுவதற்கு முன்னதாக, என்டோவர் கமாண்டர் கிரிஸ் ஃபெர்குஸன் விண்கலத்தை குட்டிக்கரணம் அடிக்கச் செய்தார். அப்போது விண்கலத்தின் அடிப்பகுதியில் உள்ள வெப்பத் தடுப்புத் தகடுகள் பல இடங்களில் பெயர்ந்திருந்தது தெரியவந்தது.

இதன் காரணமாக என்டோவர் மீண்டும் பூமிக்குத் திரும்பும் போது வெப்பம் அதிகரித்து வெடித்துச் சிதறலாம் என கூறப்பட்டாலும் நாசா அதனை மறுத்துள்ளது. பூமிக்குத் திரும்பும் முன்பாக விண்வெளி வீரர்கள் வெப்பத் தகடுகளை சீரமைத்து விடுவர் எனபதால் தரையிறங்கும் போது ஆபத்து ஏதும் ஏற்படாது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் ஒருவார காலத்திற்கும் அதிகமாக விண்வெளியில் தங்கும் வீரர்கள், மிதக்கும் ஆய்வுக் கூடத்திற்கு தேவையான உபகரணங்களை சீரமைப்பது, பொருத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு 4 முறை விண்வெளியில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த விண்கலத்தில் சென்றுள்ள வீராங்கனை சாண்ட்ரா மாக்னஸ், விண்வெளி ஆய்வுக் கூடத்திலேயே தங்கி விடுவார். அவருக்கு பதிலாக ஏற்கனவே விண்வெளி மையத்தில் தங்கியிருந்த மற்றொரு வீரர் என்டோவரில் பூமிக்குத் திரும்புவார் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்