மியான்மர்: ஜனநாயகம் கோரிய மேலும் 13 பேருக்கு சிறை!

வெள்ளி, 14 நவம்பர் 2008 (16:29 IST)
ஜனநாயக ஆட்சி கோரி மியான்மர் ராணுவ அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஜனநாயகத்திற்கான தேசியக் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 13 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நியான்-வின் கூறுகையில், கடந்த வியாழனன்று தமது கட்சியைச் சேர்ந்த 13 உறுப்பினர்களுக்கு நான்கரை ஆண்டு முதல் ஒன்பதரை ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த வாரத் துவக்கத்தில் ஜனநாயகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் அதிகமானவர்களுக்கு நீண்ட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் அவர்களில் சிலருக்கு 65 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜனநாயகம் கோரி அமைதியான முறையில் போராடியவர்களை அரசியல் கைதிகளாக சிறைப்பிடித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்த ஐ.நா.சபை பொதுச் செயலர் பான்-கி-மூன், விரைவில் அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் அந்நாட்டு ராணுவ அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மேலும் 13 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்