ஹைட்டியன் நாட்டில் பள்ளி இடிந்து 50 குழந்தைகள், ஆசிரியர்கள் பலி!
சனி, 8 நவம்பர் 2008 (12:26 IST)
ஹைட்டியன் தலைநகர் போர்ட்-ஆ-பிரின்ஸ் அருகே உள்ள பள்ளி இடிந்து விழுந்ததில் 50 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்ட்-ஆ-பிரின்ஸின் புறநகர்ப் பகுதியான பெடியான்-வில்லியில் செயல்பட்டு வந்த ஷான்டி டவுன் பள்ளி நேற்று காலை 10 மணியளவில் (இந்திய நேரப்படி நேற்றிரவு 8.30 மணி) நூற்றுக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குள் இருந்த போது இடிந்து விழுந்தது.
நேற்று மாலை வரை நடந்த மீட்புப் பணிகளின் முடிவில் 50 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்றும் உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இடிபாடுகளில் மேலும் பல குழந்தைகள் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.
இதற்கிடையில், இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகளில் பலர் உயிருடன் இருப்பதால், மீட்புப் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், பல குழந்தைகள், ஆசிரியர்கள் உயிருடன் மீட்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று முதல் இருபது வயது வரையுள்ள 700 மாணவர்கள் பயின்று வரும் இப்பள்ளியில், கட்டிடம் இடிந்த சமயத்தில் எத்தனை மாணவர்கள் இருந்தனர் என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
அந்நாட்டில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பள்ளிக் கட்டிடம் கடுமையாக் தேசமடைந்தது. ஆனாலும், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு காரணமாக தொடர்ந்து பள்ளி இயக்கப்பட்டது, தற்போது பல குழந்தைகளின் உயிரை பலி வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கரீபியன் தீவுப்பகுதியில் கியூபா நாட்டுக்கு அருகே ஹைட்டியன் குடியரசு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.