அமெரிக்க பொருளாதாரத்தை சீர்படுத்துவேன்: ஒபாமா!

சனி, 8 நவம்பர் 2008 (02:04 IST)
அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு உரிய முறையில் தீர்வு கண்டு, அதனை நிலைநிறுத்துவேன் என்று புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா உறுதி கூறினார்.

அமெரிக்கா எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடி சவால்களை தீர்ப்பதே தனது உடனடி முக்கியத்துவம் என்றும் அவர் கூறினார்.

அதிபர் தேர்தலில் சாதனை வெற்றியைப் பெற்ற பின் ஒபாமா தனது சொந்த மாகாணமான சிகாகோவில் இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் முதல்முறையாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

PTI PhotoPTI
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த ஒபாமா, நிதி நெருக்கடியால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சிறிய நிறுவனங்களுக்கு உதவுவதுடன், நடுத்தர அமெரிக்கர்களுக்கும் உதவ வேண்டியது அவசியம் என்றார்.

தவிர, நிதிநெருக்கடியை எதிர்கொள்ளவும், அதனை சீர்படுத்தவும் தனது பொருளாதார ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

தனது தலைமையிலான புதிய அரசு பொருளாதார நெருக்கடிக்கு உடனடி முன்னுரிமை அளித்து செயல்படும் என்றும், ஏற்கனவே தாம் தேர்தல் பிரசாரத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின்படி உரிய முறையில் செயலாற்றப் போவதாகவும் ஒபாமா உறுதியளித்தார்.