அமெரிக்காவில் பலத்த பாதுகாப்புக்கு இடையே அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பராக் ஒபாமா, புதிய அதிபராவது அநேகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒபாமாவின் வெற்றி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்திய நேரப்படி இன்று காலை 10 மணியளவில் வெளியாகக் கூடும் என்று தெரிகிறது.
நேற்று நடைபெற்ற தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கர்கள் வந்து வாக்களித்து சாதனை படைத்துள்ளனர்.
பெரும்பாலான மாகாணங்களில் ஜனநாயகக் கட்சிக்கே அதிக வாக்குகள் கிடைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை மீண்டும் முன்னேற்றப் பாதையில் ஒபாமா அழைத்துச் செல்வார் என ஏற்கனவே நம்பப்படுவதாகவும், எனவே அவரே புதிய அதிபராவார் என்றும் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் உறுதியாகப் போகின்றன எனலாம்.
ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டுள்ள ஜான் மெக்கெய்ன், இந்த தேர்தலில் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தாலும், தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பல்வேறு செயல்பாடுகள் வாக்காளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால், மெக்கெய்னை அவர்கள் ஆதரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
என்றாலும் மாகாணம் வாரியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.