ஆப்பிரிக்க அமெரிக்கர் அதிபராவது உறுதி?

அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் இளைஞர்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். முதல் முறையாக வெள்ளைமாளிகைக்கு அதிபராக ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் அதிபர் பதவியேற்பார் என்பது அநேகமாக உறுதி செய்யப்பட்டு விட்டது.

எதிர்பாராத திருப்பமாக ஜார்ஜ் புஷ் கட்சியான குடியரசுக் கட்சி ஆட்சியில் இருந்து இறங்குகிறது. இதன்மூலம் அமெரிக்கர்கள் ஒரு மாற்றத்தை விரும்பி ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமாவிற்கு பெருவாரியான ஆதரவை அளித்துள்ளதாகத் தெரிகிறது.

தேர்தல் நடைபெற்று முடிந்தாலும், அதிகாரப்பூர்வ முடிவு பின்னரே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிரிக்க அமெரிக்கர் அதாவது கறுப்பர் இனத்தவர் ஒருவர் அமெரிக்க அதிபர் பதவியை ஏற்பது மிகப்பெரிய சாதனையாகும்.

மேலும் இதுவரை இல்லாத அளவு அதிக விழுக்காடு வாக்குகள் பதிவாகும் என்று தெரிய வந்திருப்பதாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தவிர இந்த அதிபர் தேர்தலில் தான் மிக அதிகளவு பணம் செலவிடப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

ஒபாமா தனது பிரசாரத்திற்காக 292 மில்லியன் டாலர் அளவு விளம்பரம் செய்துள்ளார். 454 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளார். ஆனால், ஜான் மெக்கெய்ன் 230 மில்லியன் டாலர் மட்டுமே திரட்டியுள்ளார்.

வேட்பாளருக்கான தேர்தலில் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனால் முழு அளவிலான ஆதரவைப் பெற இயலாமல் போனது. இதையடுத்து அவர் அதிபர் பதவிக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து விலகினார்.

எலக்டரல் ஓட்டுகள் எனப்படும் வாக்குகளில் ஒபாமாவிற்கு 291 வாக்குகள் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சிஎன்என் தெரிவிக்கிறது. மெக்கெய்னுக்கு 157 வாக்குகள் கிடைக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி இருந்தாலும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விடும்.


வெப்துனியாவைப் படிக்கவும்