அரசுமுறைப் பயணமாக ஈரான் சென்றுள்ள இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அந்நாட்டுனான பரஸ்பர தொடர்புகள், மண்டல மேம்பாட்டை விரிவுபடுத்திக் கொள்வதுடன், இருதரப்பு வர்த்தகத்தையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு அயலுறவு அமைச்சருடன் விவாதித்துள்ளார்.
நேற்று நடந்த சந்திப்பின் போது பிரணாப்புடன் பேசிய ஈரான் அயலுறவு அமைச்சர் மொட்டாகி, இரு நாடுகளிடையே தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வணிகத்தின் அளவு திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்ததுடன், தத்தமது நாடுகளின் நலனைப் பூர்த்தி செய்ய இருதரப்பிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்தியா-ஈரான் இடையே நல்ல ஆழமான புரிதல் ஏற்பட்டுள்ளதாகத் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் இருநாடுகளிடம் உள்ள திறமையை சுட்டிக்காட்டிய அவர், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தின் அளவை மேம்படுத்தவும், கூட்டு முதலீடுகள் அதிகரிக்கவும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது என்றார்.
அப்போது பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியா-ஈரான் இடையிலான உறவு எப்போதும் மிக நெருக்கமாகவே இருந்து வந்துள்ளது. தத்தமது நாட்டு நலன்களை மேம்படுத்த இருவருமே உதவி வருவதால் இந்த உறவு எதன் காரணமாகவும் கடந்த காலத்தில் பாதிக்கப்படவில்லை என்றார்.
ஈராக், ஆப்கன் விவகாரத்தில் ஒருமித்த கருத்து: ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்துவதில் இந்தியாவும், ஈரானும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மொட்டாகி, அந்நாடுகளின் நலன் பாதிக்காத வகையில், அயல்நாட்டு சக்திகளின் தலையீடு இல்லாமல் மண்டல அளவிலான கூட்டு உறவை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்தியா, ஈரான் விரும்புவதாக கூறினார்.