இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங், லாகூர் சிறையில் மரண தண்டனைக் கைதிகள் இருக்கும் அறையிலிருந்து சாதாரண கைதிகளை அடைக்கும் அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால் சரப்ஜித் சிங்கின் மரண தண்டனை ரத்தாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
1990ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சரப்ஜித் சிங் கைது செய்யப்பட்டார். அவருக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்தது.
மஞ்சித் சிங் என்று பாகிஸ்தான் அதிகாரிகளால் குறிப்பிடப்படும் சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும் என இந்திய அரசின் சார்பில் பாகிஸ்தான் அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, இவருக்கு மரண தண்டனை என்று நிர்ணயிக்கப்பட்டது. பிறகுக் அப்போதைய அதிபர் முஷாரஃப் அதனை 30 நாட்கள் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
அதன் பிறகு பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானி, இந்தியாவின் கோரிக்கைக்கு இணங்க இதில் தலையிட்டு சரப்ஜித் சிங்கின் மரண தண்டனையை மறுஉத்தரவு வரும் வரை தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் சிறையில் மரண தண்டனைக் கைதிகளுக்கான அறையிலிருந்து சாதாரண கைதிகள் அறைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளது அவரது மரண தண்டனை ரத்தாகும் என்ற நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.