அணு ஆயுத ஒழிப்பில் ஒத்தக்கருத்து வேண்டும்: இந்தியா!
வல்லரசாக இருந்தாலும், மற்ற அணு ஆயுத நாடுகள் ஆயினும், ஒட்டுமொத்த அணு ஆயுத ஒழிப்பில் பாகுபாடற்ற ஒத்தகருத்து உருவாக்கப்படவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
உலகளாவிய அளவில் எவ்வித பாகுபாடுமின்றி அணு ஆயுதங்களை ஒழித்து, அதன் மூலம் அணு ஆயுதமற்ற உலகை உருவாக்கும் இலக்கை நோக்கி இந்தியா தொடர்ந்து செயல்படும் என்று சர்வதேச பாதுகாப்பு மற்றும் அயுத ஒழிப்பிற்கான ஐ.நா. அவைக்குழுவிற்கு இந்தியா தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளது.
இக்குழுவிற்கான இந்தியத் தூதர் விஸ்வஜித் பி. சிங், அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக இந்தியாவின் சார்பாக 3 தீர்மானங்களை முன்மொழிந்துள்ளார்.
அணு ஆயுதங்கள் தடுப்பு உடன்படிக்கை உருவாக்குதல், அணு ஆயுத அச்சுறுத்தலைக் குறைத்தல், அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளுக்குச் சென்றுவிடாமல் தடுத்தலும், அவர்கள் அத்தொழில் நுட்பத்தை பெற்றுவிடாமல் முன்தடுத்தலும் என இந்தியா முன்மொழிந்துள்ள இம்மூன்று தீர்மானங்களும் அணு ஆயுத ஒழிப்புக் குழுவில் விவாதிக்கப்பட்டப் பின்னர் ஐ.நா. பொதுச் சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
1988ஆம் ஆண்டு ஐ.நா. பேரவையில் அன்றையப் பிரதமர் இராஜீவ் காந்தி ஆற்றிய உரையில், “அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பதன் வாயிலாக மட்டுமே அதன் அச்சுறுத்தலில் இருந்து உலகைக் காப்பதற்கான ஒரே வழி” என்று பேசியதே இன்றுவரை அப்பிரச்சனைக்கு சரியான தீர்வாக திகழ்ந்நது வருகிறது என்று விஸ்வஜித் கூறியுள்ளார்.