அமெரிக்க ராணுவத் தளபதி சியாச்சின் செல்வதற்கு பாக். கண்டனம்!
வெள்ளி, 17 அக்டோபர் 2008 (17:57 IST)
அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்க ராணுவ தளபதி, சியாச்சின் செல்லத் திட்டமிட்டுள்ளதற்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு 3 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளளும் அமெரிக்க ராணுவ தளபதி ஜெனரல் டபிள்யூ.கேஸி, ஜம்மு-காஷ்மீரில் உள்ள சியாச்சின் பனிமலையைப் பகுதி பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாகிஸ்தானில் வெளியாகும் தி நியூஸ் டெய்லி என்ற நாளிதழுக்கு பேட்டியளித்த அந்நாட்டு அயலுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், சியாச்சின் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதுடன், அப்பகுதி யாருக்கு சொந்தம் என இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அமெரிக்க ராணுவத் தளபதி அப்பகுதியை பார்வையிடுவது சர்ச்சையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
எனினும் அமெரிக்க ராணுவத் தளபதி சியாச்சின் செல்வார் என்ற அதிகாரப்பூர்வத் தகவல்கள் தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1984 முதல் சியாச்சின் யாருக்கு சொந்தம் என்பதில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அவ்வப்போது இரு நாட்டு படைகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடும் நடந்தது அப்பகுதியில் பதட்டத்தை அதிகரித்தது.
கடந்த 2003இல் இரு நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த அறிவிப்பில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதட்டம் ஓரளவு தணிந்தாலும், பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த அறிவிப்பை அடிக்கடி மீறுவதால் அமைதிப் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் வரும் அமெரிக்க ராணுவத் தளபதிக்கு, உயர்ந்த மலைப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து இந்தியா விளக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.