இந்தியாவின் உறுதி அணு ஆயுத பரவல் தடுப்பிற்கு வலு சேர்க்கும்: அமெரிக்கா!
வெள்ளி, 17 அக்டோபர் 2008 (14:01 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்காக இந்தியா அளித்துள்ள உறுதிமொழிகள் உலகளாவிய அளவில் அணு ஆயுத பரவல் தடுப்பு முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அணு சக்தி ஒத்துழைப்புத் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலன்கள் குறித்து அமெரிக்க அயலுறவு அமைச்சகம் வாஷிங்டனில் அளித்துள்ள அறிக்கையில், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையே இராஜ தந்திர, அரசியல், பொருளாதார, சுற்றுச் சூழல் ரீதியலான நலன்களை உள்ளடக்கியது என்று கூறப்பட்டுள்ளது.
அணு ஆயுதப் பரவல் தடுப்புத் தொடர்பாக இந்தியா மேற்கொண்டுவந்த நடவடிக்கைகள் உலகளாவிய அளவில் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை ஒழிப்பதில் முக்கியமானவை என்று கூறியுள்ள அந்த அறிக்கை, இரண்டு அரசுகளும் கடந்த 3 ஆண்டுக் காலத்தில் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக அணு சக்தி கண்காணிப்பு முகமையும் (ஐ.ஏ.இ.ஏ.), அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவும் (என்.எஸ்.ஜி.) இந்தியாவிற்கு ஒப்புதலும், விலக்கலும் அளித்ததாகக் கூறியுள்ளது.