பாகிஸ்தான்: ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் பலி!
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (13:49 IST)
அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஏவியதாகக் கருதப்படும் இரண்டு ஏவுகணைகள், ஆஃப்கான் எல்லைக்கு அருகில் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் தபாய் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பைத் தாக்கியதில் 9க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இடிபாடுகளில் இருந்து இதுவரை 3 சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், பலியானோரில் சிலர் அராபியர்கள் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 6 சடலங்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் மாகாணத்தில் உள்ள பழங்குடியினர் பகுதியில் இன்று அதிகாலை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் பறந்ததைப் பார்த்ததாகவும், அதிலிருந்து புறப்பட்ட இரண்டு ஏவுகணைகள் தபாய் என்ற இடத்திலுள்ள குடியிருப்பைத் தாக்கியதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
தாக்குதலிற்கு ஆளான பகுதியில் எழுந்த புகை மண்டலத்தைப் பார்த்த பொது மக்கள் தெரிவித்த தகவலின்பேரில் சென்ற காவலர்கள், கட்டடங்கள் நொறுங்கிக் கிடப்பதைக் கண்டு உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் அமெரிக்க உளவு விமானத்தின் மீது ஏ.கே. 47 துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் ஆகியவற்றைக்கொண்டு பழங்குடியினர் தாக்குதல் நடத்தியதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.