இந்தியாவுக்கு யுரேனியம்: ஆஸி. அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

வெள்ளி, 10 அக்டோபர் 2008 (11:37 IST)
அணு ஆயுதப் பரவல் தடை உடன்பாட்டில் கையெழுத்திடாத இந்தியாவுக்கு, யுரேனியம் விற்பனை செய்ய முடியாது என்ற ஆஸ்ட்ரேலிய அரசின் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தற்போது சட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு யுரேனியம் விற்பனை செய்ய முடியாது என்பதை கெவின் ரூட் அரசு இனியும் நியாயப்படுத்த முடியாது என்று எதிர்க்கட்சியினரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நடந்த அணு தொழில்நுட்ப வணிகக் குழுக் (என்.எஸ்.ஜி) கூட்டத்தில் இதே ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளித்து விட்டு, தற்போது இந்தியாவுக்கு யுரேனியம் விற்பனை செய்ய முடியாது எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இதன் மூலம் ஆஸ்ட்ரேலிய இயற்கை வளங்களை நம்பியுள்ள ஏராளமான உள்ளூர் தொழில் மற்றும் அவற்றில் ஈடுபடும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதுடன், வெளிநாட்டு முதலீடுகளும் ஆஸ்ட்ரேலியாவுக்கு கிடைக்காது என எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

எனவே, மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியா தனது மின்தேவைகளை சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பெறுவதற்கு வகை செய்யும் ஒப்பந்தத்தின் கீழ் அதன் அணு உலைகளுக்கு தேவையான யுரேனியத்தை ஆஸ்ட்ரேலிய அரசு வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்