நேபாளம்: விமான விபத்தில் 18 பேர் பலி

புதன், 8 அக்டோபர் 2008 (12:58 IST)
நேபாள நாட்டில் இன்று காலை ஏற்பட்ட விமான விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.

எவரெஸ்ட் சிகரத்தை மிக அருகாமையில் பார்த்து ரசிப்பதற்காக, நேபாளத்திற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். அவர்களின் வசதிக்காக வட கிழக்கு நேபாளத்தில் சிறுரக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல் இன்று காலை 3 விமானப் பணியாளர்கள் உட்பட 19 பேருடன் புறப்பட்ட சிறு ரக விமானம் ஒன்று, மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கி நொறுங்கியது. இதில், 14 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.

இவர்களில் 12 பேர் ஜெர்மானியர்கள்; இருவர் ஸ்விட்சர்லாந்து நாட்டவர்கள்.
இச்சம்பவத்தில் பலத்த காயங்களுடன் விமானி உயிர் தப்பினார். இறந்தவர்களின் உடல்களை தேடி கண்டுபிடித்து மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்