சரப்ஜித்தைச் சந்தித்தார் பாகிஸ்தான் சட்ட அமைச்சர்!
திங்கள், 6 அக்டோபர் 2008 (13:24 IST)
பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியரான சரப்ஜித் சிங்கை, பாகிஸ்தான் சட்டத் துறை அமைச்சர் ஃபரூக் நாயெக் இன்று சந்தித்துப் பேசினார்.
சரப்ஜித் சிங்குக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டையில் அவருக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்று இந்திய அரசு விடுத்த வேண்டுகோளையடுத்து, சரப்ஜித் வழக்கை மறுபரிசீலனை செய்ய லாகூரில் உள்ள கோட் லக்பாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரப்ஜித்துடன் பாகிஸ்தான் சட்டத் துறை அமைச்சர் ஃபரூக் நாயெக் இன்று சந்தித்துப் பேசினார்.
முன்னதாக, சரப்ஜித் சிங்குக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோர்தான் இறுதி முடிவு எடுப்பார்கள் என்று நாயக் கூறினார்.
கடந்த 1990ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகணத்தில் நடந்த 4 குண்டு வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் சரப்ஜித் சிங்குக்கு தொடர்பு உள்ளதாக கூறி அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதையடுத்து, சரப்ஜித் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், ஏப்ரல் 1ஆம் தேதி சரப்ஜித் சிங்குக்கு மரண தண்டைனை விதிக்கப்பட இருந்தது. ஆனால் இந்திய அரசு சரப்ஜித் சிங்குக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்று அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரஃப் இந்த தண்டனையை 30 நாட்கள் தள்ளி வைத்தார்.
பின்னர் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தலையிட்டதால் மறு அறிவிப்பு வரும் வரை சரப்ஜித் சிங்கின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கடந்த ஜூன் 21ஆம் தேதி முன்னாள் பிரதமர் மறைந்த பெனாசீர் பூட்டோவின் பிறந்த நாளை முன்னிட்டு மரண தண்டனை விதிக்கபபட்டுள்ள 1000 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதாக பிரதமர் கிலானி அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பால் சரப்ஜித் சிங்குக்கு பயன் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.