கிர்கிஸ்தானில் கடும் நிலநடுக்கம்: 58 பேர் பலி!

திங்கள், 6 அக்டோபர் 2008 (12:19 IST)
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 58 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு நெருக்கடிநிலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதள செய்தியில், கிரிகிஸ்தான்-தஜிகிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் எல்லைப்பகுதியில், சேரி-டாஷ் என்ற இடத்திற்கு கிழக்கே 35 மைல் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 9.52 மணியளவில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நுரா கிராமத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதகதியில்
நடந்து வருவதாக கிர்கிஸ்தான் நெருக்கடி நிலை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளில் சிக்கி 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், நிலநடுக்கத்தின் தாக்கம் கிர்கிஸ்தான் பகுதிகளில்தான் பெரும்பாலும் உணரப்பட்டது என்றாலும், நிலநடுக்கம் மையம் கொண்ட பகுதி குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகிறது. நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் தஜிகிஸ்தான்- கிர்கிஸ்தான்- சீன எல்லைப்பகுதியில் ஏற்பட்டதாக தஜிகிஸ்தான் நிலநடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்