இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு 123 ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அனுமதியளித்ததைத் தொடர்ந்து இந்திய அரசின் கையெழுத்தைப் பெறுவதற்காக அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் இன்று இந்தியா வருகிறார்.
PTI Photo
FILE
இதுதொடர்பாக அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் மெக்கார்மார்க் வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வெள்ளியன்று இந்தியா செல்லும் காண்டலீசா ரைஸ், பிரதமர் மன்மோகன் சிங், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிப்பார் என்று கூறினார்.
ரைஸின் இந்தியப் பயணத்தின் போது அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அதுகுறித்து தற்போது எதுவும் கூற முடியாது என மெக்கார்மார்க் பதிலளித்தார்.
எனினும், ரைஸின் இந்திய பயணத்தில் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திடும் என டெல்லியில் உள்ள அரசு வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.