பயங்கரவாதத்திற்கு எதிராக சர்தாரி நடவடிக்கை எடுப்பாரா?
திங்கள், 29 செப்டம்பர் 2008 (13:51 IST)
இந்திய-பாகிஸ்தான் நட்புறவை மேம்படுத்த விரும்பினாலும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உறுதியான நடவடிக்கை எடுப்பாரா என்பது குறித்து இந்தியாவிடம் எந்த பதிலும் இல்லை என அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டனில் பிரதமர் மன்மோகன்- அதிபர் சர்தாரி இடையிலான சந்திப்புக்கு பின்னர் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது சிறப்பான விடயம் என்றும், தீவிரவாதத்தை ஒடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று உலகிற்கு உணர்த்துவது போல் இந்த கூட்டறிக்கை இருந்தது என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் ஜர்தாரி உறுதியுடன் இருந்தாலும், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அவர் அமல்படுத்துவாரா என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக கொடுத்துள்ள வாக்குறுதிகளை ஜர்தாரி நிறைவேற்றுவாரா என்பது குறித்து பிரதமர் மன்மோகன், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆகிய இருவருக்குமே உறுதியான நம்பிக்கை இல்லை என்றும் கூறப்படுகிறது.
எனினும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து போராடுவோம் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்திய தரப்புக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய விடயம் என்றும் பிரதமருடன் அமெரிக்க பயணம் சென்ற அதிகாரிகள் குழு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.