அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க இந்தியா ஆதரவளிக்கும்: பிரதமர் பேச்சு!
அணு ஆயுத அச்சுறுத்தலை முழுமையாக நீக்கவேண்டுமெனில், அணு ஆயுதங்களை தயாரித்து குவித்து வைப்பதற்கு தடை விதித்து, ஒரு காலகட்டத்திற்குள் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழித்துவிட வழிவகுக்கும் உடன்படிக்கை உருவாக்க இந்தியா ஆதரவளிக்கும் என்று ஐ.நா. பேரவையில் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
ஐக்கிய நாடுகள் பேரவையின் பொதுக் கூட்டத்தில் நேற்று (இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு) பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார். 22 ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.நா. பேரவையில் உரையாற்றிய அன்றையப் பிரதமர் இராஜீவ் காந்தி பேசுகையில், அணு ஆயுத பரவல் தடுப்பை உறுதி செய்து அதனால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து உலகை காப்பாற்ற வேண்டுமெனில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிப்பதே ஒரே வழி என்று கூறியதை சுட்டிக்காட்டியப் பிரதமர் மன்மோகன் சிங், “அணு ஆயுத தயாரிப்பு, சேமித்து குவித்தல், மேம்பாடு ஆகியவற்றிற்கு தடைவிதிக்கவும், அதே நேரத்தில் ஒரு கால வரையறை நிர்ணயித்து அனைத்து அணு ஆயுதங்களை ஒழிக்கவும் வழிகோலும் அணு ஆயுத ஒழிப்பு உடன்படிக்கையை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது” என்று பேசினார்.
அணு ஆயுத பரவல் தடுப்பில் இந்தியா கவனமாகவும், சிரத்தையுடன் நடந்துகொண்டுள்ளது என்பதற்கு அணுத் தொழில் நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி.) வழங்கிய விலக்குடன் கூடிய அனுமதியே அத்தாட்சி என்று கூறிய பிரதமர், இந்தியா சர்வதேச அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை செய்து கொள்வது அதன் எரிசக்தி தேவையை நிவர்த்தி செய்வது மட்டுமின்றி, உலகை வெப்பமடையச் செய்யும் காரணிகளை குறைக்க உதவும் முக்கிய நடவடிக்கை என்றும் மன்மோகன் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகம் மலர்ந்திருப்பதை மகிழ்ச்சியுடன் இந்தியா வரவேற்கிறது என்று கூறிய பிரதமர், அந்நாட்டுடன் நல்லுறவை மேம்படுத்திக் கொள்ள, காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியா தீர்வு காணும் என்று கூறினார்.
நேபாளம், பூட்டான் ஆகிய அண்டை நாடுகளிலும் ஜனநாயகம் மலர்ந்திருப்பதை இந்தியா வரவேற்கும் அதே வேளையில், அந்நாடுகளுடன் பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் வறுமை ஒழிப்பு, வளங்குன்றா மேம்பாடு ஆகியவற்றை இந்தியா நடைமுறைப்படுத்தும் என்று கூறினார்.
ஐ.நா.அவையின் பாதுகாப்புப் பேரவையை விரிவுப்படுத்தி பலப்படுத்துவதன் வாயிலாக மட்டுமே உலக சமூகத்தின் முழுமையான ஒத்துழைப்பு பிரதிபலிக்கும் அமைப்பாக அது இருக்கும் என்று கூறிய பிரதமர், அதனை செய்வதற்கான பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
உலகளாவிய அளவில் நிதி அமைப்புக்களை முறைப்படுத்தக்கூடிய, நிதி சீர்த்திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு அமைப்பு அவசியம் என்று கூறிய பிரதமர், நிதி அமைப்புக்களை முறைபடுத்தக்கூடிய ஒழுங்குமுறை அமைப்பு இல்லாததே நிதி அமைப்பு பலவீனமானதாக்கியது, அதன் காரணமாகவே சமீபத்தில் மிகப்பெரிய நிதிச் சிக்கல் ஏற்பட்டது என்று கூறினார்.
உலக அளவில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை உணவுப் பற்றாக்குறையும், எரிசக்தி சிக்கலும், நிதிச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவும் அச்சுறுத்தி வருவதாகவும் கூறிய பிரதமர், உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க இரண்டாவது பசுமை புரட்சி அவசியம் என்றார்.