அமெரிக்காவில் 2 புதிய தூதரக அலுவலகம்: சிவ்சங்கர் மேனன்!
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (13:56 IST)
அமெரிக்காவின் ஸீட்டில், அட்லாண்டா நகரங்களில் 2 புதிய இந்திய தூதரக அலுவலகத்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அயலுறவு செயலர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன்- அதிபர் புஷ் இடையே இன்று அதிகாலை சந்திப்பு நடந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிவ்சங்கர் மேனன், அமெரிக்காவின் முக்கிய வர்த்தக நகரங்களான ஸீட்டில், அட்லாண்டாவில் புதிய இந்திய தூதரக அலுவலகம் திறக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.
இந்த இரு நகரங்களிலும் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை தலா 30 ஆயிரத்தை கடந்துள்ளதை சுட்டிக்காட்டிய சிவ்சங்கர் மேனன், 2 தூதரக அலுவலகங்களும் என்று திறக்கப்படும் என்பதை தெரிவிக்கவில்லை.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இந்திய தூதரகமும், அந்நாட்டின் முக்கிய நகரங்களான நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, ஹவுஸ்டன் ஆகிய நகரங்களில் தலா ஒரு தூதகர அலுவலகமும் இயங்கி வரும் நிலையில், ஸீட்டில், அட்லாண்டாவில் 2 புதிய தூதரக அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.