பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாரியாட் விடுதியின் மீது கடந்த சனிக்கிழமை கார் குண்டு தாக்குதல் நடத்தபட்டது தொடர்பாக அல்கய்டாவைச் சேர்ந்த முர்சலீன் என்பவரை பாகிஸ்தான் உளவுத்துறை இன்று கைது செய்துள்ளது.
இவர், அல்கய்டா தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவனாக கருதப்படும் அய்மன் அல்ஜவஹரியின் கூட்டாளியாவார். குஜ்ரன்வாலாவில் உள்ள மசூதி ஒன்றில் அவரை கைது செய்த உளவுத்துறை அதிகாரிகள், பின்னர் விசாரணைக்காக அவரை இஸ்லாமாபாத் அழைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-ஜாங்வி அமைப்பிலும் இடம்பெற்றுள்ள முர்சலீன், அந்நாட்டு அரசால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி என்றும், அவரை பற்றி தகவல் தருபவருக்கு ரூ.5 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க உளவு நிறுவனம் எஃப்.பி.ஐ.யின் தேடப்படும் அதி பயங்கர தீவிரவாதிகளின் பட்டியலிலும் முர்சலீன் இடம்பெற்றுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள மரியோட் விடுதியின் மீது கடந்த 20ஆம் தேதி நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர் என்பதும், இத்தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை இன்று கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.