தலைநகர் இஸ்லாமாபாத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது 'மேரியட்' என்ற 5 நட்சத்திர ஓட்டல். 290 அறைகளை கொண்ட இந்த ஓட்டலில் அயல்நாட்டு சுற்றுலா பயணிகள், ஏராளமான அமெரிக்க அதிகாரிகள் தங்கியிருந்தனர்.
நேற்று இரவு சுமார் 8 மணியளவில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று வேகமாக சென்று, ஓட்டலின் முன்புற கேட் மீது மோதியது.
அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்துச்சிதறிய சத்தம் பல மைல் தூரம் வரை கேட்டது. ஓட்டலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான கார்கள் தூக்கி எறியப்பட்டன. ஓட்டல் கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. கட்டிட ஜன்னல், கதவுகளும் நொறுங்கி விழுந்தன.
குண்டு வெடித்த இடத்தில் 20 அடி ஆழம் 30 அடி அகலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. ஓட்டலின் 11 மாடிகளில் உள்ள அறைகளும் தீப்பிடித்து எரிந்தன. இதனால் ஓட்டல் முழுமையாக சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் ஓட்டலில் இருந்த அயல்நாட்டு தூதரக அதிகாரிகள், பாதுகாப்பு காவலர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டவர்கள் உடல் சிதறி பலியானார்கள். 200 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் பலர் ஓட்டல் அறைக்குள் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.