அமெரிக்காவை விட யு.ஏ.இ., குவைத்தில் பெண் அமைச்சர்கள் அதிகம்!
சனி, 20 செப்டம்பர் 2008 (18:33 IST)
அமெரிக்கா, பிற மேற்கத்திய நாடுகளைவிட ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் நாடுகளில் அமைச்சரவையில் பெண்களுக்கு அதிகம் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் புதிய அறிக்கையின் படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரவையில் 22.7 விழுக்காடு பெண் அமைச்சர்களும், குவைத்தில் 22.2 விழுக்காடு அளவுக்கு பெண் அமைச்சர்களும் உள்ளனர்.
ஆனால், பெண்களுக்கு அதிக சுதந்திர வழங்கப்படும் நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் அமைச்சரவையில் 12.5 விழுக்காடு அளவுக்கு மட்டுமே பெண் அமைச்சர்கள் உள்ளனர். பிரான்சில் 6.7 விழுக்காடு பெண் அமைச்சர்களும், இங்கிலாந்தில் 6.7 விழுக்காடு பெண் அமைச்சர்களும் பதவி வகிக்கின்றனர்.
உலகளவில் அதிக பெண் உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், பாலஸ்தீனம் (55.6 விழுக்காடு) முதலிடத்தைப் பிடித்துள்ளது. இப்பட்டியலில் சைப்ரஸ் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. ஏனெனில் அங்கு ஒரு பெண் அமைச்சர் கூட இல்லை.