இந்திய- சீன எல்லைப் பேச்சு உடன்பாடு ஏதுமின்றி முடிந்தது!
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (19:19 IST)
இந்தியா- சீனா இடையில் நடந்த 12ஆவது சுற்று எல்லைப் பேச்சு உடன்பாடு ஏதுமின்றி முடிந்தது.
இந்தப் பிரச்சனையில் நியாயமான வெளிப்படையான இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வைக் கண்டறிவோம் என்று மட்டும் இரண்டு நாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு அணு சக்தி தொழில்நுட்ப வர்த்தகம் மேற்கொள்ள அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவில் விலக்குடன் கூடிய அனுமதி வழங்கப்படுவதற்குச் சீனா தடையாக இருந்ததால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில், இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான அயலுறவுச் செயலர்கள் அளவிலான 12 ஆவது சுற்றுப் பேச்சு சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று துவங்கியது.
கடந்த இரண்டு நாட்களாக நடந்த பேச்சின் முடிவில் சீன அயலுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், "சீன அயலுறவுச் செயலர் டாய் பிங்குவா, இந்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோர் தலைமையிலான குழுக்களுக்கு இடையிலான பேச்சு நட்புரீதியாகவும், முன்னேற்றமளிக்கும் வகையிலும் அமைந்திருந்தது" என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.
எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சிவசங்கர் மேனன், டாய் பிங்குவா ஆகியோர் ஆழமான கருத்துக்களை ஆதாரங்களுடன் முன் வைத்துள்ளனர். இந்தப் பேச்சின் முடிவுகளை தங்கள் தலைவர்களிடம் கொண்டு சென்று நியாயமான வெளிப்படையான இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வை எட்டுவோம் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்று சீன அரசு செய்தி நிறுவனம் கூறுகிறது.
அடுத்த சுற்றுப் பேச்சு இந்தியாவில் நடக்கவுள்ளது.
முன்னதாக, அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு கூட்டத்தில் தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சீனா மேற்கொண்டது பற்றித் தாங்கள் கடும் அதிர்ச்சி அடைந்ததாக டெல்லி வந்திருந்த சீன அயலுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சியிடம் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.