தாய்லாந்து: புதிய பிரதமராக சோம்சாய் வோங்சாவத் தேர்வு!
புதன், 17 செப்டம்பர் 2008 (12:37 IST)
தாய்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் அந்நாட்டின் புதிய பிரதமராக சோம்சாய் வோங்சாவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் தாக்-ஷின் ஷினாவத்ராவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்து நாடாளுமன்றத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில், 60 விழுக்காடு உறுப்பினர்களுக்கும் அதிகமானவர்களின் ஆதரவை சோம்சாய் பெற்றதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் புதிய பிரதமருக்கு அந்நாட்டு மன்னர் புமிபோல் அதுல்யதேஜ் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்பதால், சோம்சாய் பதவியேற்க சில நாட்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிரதமர் தாக்-ஷினுக்கு எதிராக கிளர்ச்சி வெடித்த போது அந்நாட்டு ராணுவம் அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றியது.
இதையடுத்து பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சாமக் சுந்தரவேஜ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்ட பணத்தை பெற்றதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அரசமைப்பு நீதிமன்றம் சார்பில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக கடந்த 12ஆம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கோரம் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நடந்த புதிய பிரதமருக்கான தேர்வில், மக்கள் சக்தி கட்சியின் துணைத் தலைவரும், தாக்-ஷின் சகோதரியின் கணவருமான சோம்சாய் வோங்சாவத் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.