பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்கமுடியாது: பான்-கி-மூன்!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (12:30 IST)
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பயங்கரவாத நடவடிக்கைகளால், அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து வருவதை வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன், பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் நியாயப்படுத்தவோ, ஏற்கவோ முடியாது என்றார்.

PTI PhotoFILE
சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை தீவிரப்படுத்த உலக நாடுகளை ஒன்றிணைக்கு‌ம் முயற்சியில் ஐ.நா. தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அதே தருணத்தில் பயங்கரவாதத்தில் இருந்து உலக மக்களை காப்பதே ஐ.நா.வின் முதன்மை குறிக்கோள் என்றும் பான்-கி-மூன் குறிப்பிட்டார்.

எனினும், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில், அமெரிக்க ராணுவம் உரிய அனுமதியின்றி அத்துமீறி தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது குறித்த கேள்விக்கு, இதுபற்றி கருத்து தெரிவிக்கும் நிலையில் தாம் தற்போது இல்லை என்று கூறினார்.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்கள் மீது அமெரிக்க ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. ஆனால் பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க ராணுவம் அத்துமீறி நுழைந்து விட்டதாக கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி பர்வேஸ் கயானி, நாட்டின் இறையாண்மையை எந்த விலை கொடுத்தேனும் பாதுகாப்போம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.