வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா பிணையில் விடுதலை!
வியாழன், 11 செப்டம்பர் 2008 (13:47 IST)
வங்கதேச முன்னாள் பிரதமரான கலிதா ஜியா ஓராண்டு சிறைவாசத்திற்கு பின்னர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்தாண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் விசாரணைக்கு வந்த அவர் மீதான 2 ஊழல் வழக்குகளில், அவர் பிணையில் வெளியேற அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து இன்று முற்பகல் 11.35 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) கலிதா ஜியா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜியா, தனது கணவரின் கல்லறைக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.
கடந்த 1991ஆம் ஆண்டு வரை இருமுறை அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியாவின், மகன்கள் தாரிக் ரஹ்மான், அராஃபத் ரஹ்மான் இருவரும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர். எனினும் சிறையில் இருந்த காலத்தில் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பிணை வழங்கப்பட்டது.