தாய்லாந்து: புதிய பிரதமர் 12ஆம் தேதி தேர்வு!

புதன், 10 செப்டம்பர் 2008 (17:09 IST)
தாய்லாந்தின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வா‌க்கு‌ப்ப‌திவு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வரும் 12ஆம் தேதி நடக்கிறது.

அந்நாட்டு நேரப்படி காலை 9.30 மணியளவில் நாடாளுமன்றத்தில் துவங்கும் அவசர கூட்டத்தில் நடைபெறும் வாக்குப்பதிவில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க உள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற மூத்த அதிகாரி பிட்டோன் புன்ஹிரன் கூறினார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்காக சம்பந்தப்பட்ட தொலைக்காட்‌சி நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்ட பணத்தை பெற்றதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் சாமக் சுந்தரவேஜை அரசமைப்பு நீதிமன்றம் பதவி நீக்கம் செய்தது.

எனினும், அவர் அரசியலில் தொடர்ந்து நீடிக்க நீதிபதி தடைவிதிக்கவில்லை என்பதால், வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் புதிய பிரதமருக்கான தேர்தலில் சுந்தரவேஜ் போட்டியிடுவார் என்றும், நாடாளுமன்றத்தில் அவருக்கு உள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி மீண்டும் பிரதமர் பதவிக்கு வருவார் என்றும் மக்கள் சக்தி கட்சியின் மூத்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

ஆனால், சுந்தரவேஜை மீண்டும் பிரதமராக தேர்வு செய்வதற்கு முக்கிய கூட்டணி கட்சி கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து, வேறு ஒருவரை பிரதமராக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் சக்தி கட்சியின் துணைத் தலைவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்