அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை: ஹோவர்ட் பெர்மன்!
திங்கள், 8 செப்டம்பர் 2008 (18:38 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் (காங்கிரஸ்) அயல்நாட்டு விவகாரக் குழுவின் தலைவர் ஹோவர்ட் பெர்மன், அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை, அணு ஆயுதப் போட்டியைத் தான் எதிர்க்கிறோம் என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கலிபோர்னியாவின் வான் நுயிஸில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை தாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும், அணு ஆயுதப் பரவலை தடுக்கும் கொள்கைகளை பலவீனப்படுத்துவதைத்தான் தாம் எதிர்ப்பதாகவும் பெர்மன் கூறியுள்ளார்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் விரைவாக அனுமதி பெற சிறப்பு நடைமுறையை கடைப்பிடிக்கும் புஷ் அரசு, இந்த ஒப்பந்தத்திற்கு என்.எஸ்.ஜி.யின் ஒப்புதல், ஹைட் சட்டத்துடன் எப்படி ஒத்துப்போகும், இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ள அணு சக்தி தொழில்நுட்பம் என்ன? அணு ஆயுத சோதனை நடத்தினால் அமெரிக்க அரசு என்ன செய்யும் என்பது பற்றியும் விளக்க வேண்டும் என பெர்மன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அயல்நாட்டு விவகாரங்களுக்கான கூட்டமைப்பில் ஆஜரான அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில், ஹைட் சட்டத்தின் சாராம்சங்கள் முழுவதுமாக பின்பற்றப்படும் என உறுதியளித்திருந்ததையும் பெர்மன் தனது அறிக்கையில் நினைவு கூர்ந்துள்ளார்.
இதற்கிடையில், நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பெர்மன் அளித்துள்ள பேட்டியில், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு என்.எஸ்.ஜி-யில் அனுமதி பெறுவதற்காக எந்தவித சமரசத்தையும் புஷ் அரசு மேற்கொள்ளவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே அமெரிக்க நாடாளுமன்ற இதனை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கும் என்றும், அதுவரை இவ்விடயத்தில் அவசரம் காட்டப்படாது என்றும் கூறியுள்ளார்.