அணு சக்தி ஒப்பந்தத்தில் ஒளிவுமறைவா? அமெரிக்கா மறுப்பு!
வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (11:29 IST)
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்திய பின்னர் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால், அணு எரிபொருள் வினியோகம் நிறுத்தப்படும் என்ற விடயத்தை ஒருபோதும் மறைத்ததில்லை என அமெரிக்கா மறுத்துள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் வுட், அணு ஆயுத சோதனை நடத்தும் விடயத்தில் அமெரிக்காவின் நிலையை இந்திய அரசுக்கு தெளிவாக உணர்த்தியுள்ளதாகவும், இதனை இந்திய அதிகாரிகளும் சரியாகப் புரிந்து கொண்டதாகவும், இதில் ஒளிவு மறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறினார்.
அணு சக்தி ஒப்பந்த விடயத்தில் இந்திய மக்களுக்கு இருவேறு கருத்துகள் இருந்தாலும், அமெரிக்கா எப்போதும் தெளிவான மனப்பான்மையுடன் இருப்பதால், இதில் எந்த விடயத்தையும் மறைக்க அமெரிக்கா நினைவில்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த ஒப்பந்தத்தை பற்றி தொடர்ந்து விவாதித்து வருவதாகவும், இந்த விவாதம் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் ராபர்ட் வுட் விளக்கினார்.
கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி இந்தியா-அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அவசியம் குறித்து அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், சர்வதேச அரங்கில் அணு ஆயுதப் பரவலை தடை செய்யும் முயற்சிகளுக்கும் இந்தியாவுடனான ஒப்பந்தம் பயன் தருவதாக இருக்கும் என்றார்.
அணு சக்தி எரிபொருள் வழங்கும் நாடுகளுடன் வியாபாரம் மேற்கொள்ள இந்தியாவுக்கு விலக்கு அளிக்க கோரும் சிறப்பு கூட்டம் வியன்னாவில் நேற்று துவங்குவதற்கு முன்பாக, அமெரிக்க அதிபர் புஷ் அந்நாட்டுக்கு நாடாளுமன்றத்திற்கு எழுதிய கடிதம் அமெரிக்க நாளிதழில் வெளியானது.
அதில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்திய பின்னர் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால், அணு எரிபொருள் வினியோகத்தை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கடிதம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்டிருந்ததும் சர்ச்சையை மேலும் தீவிரமாக்கியது.
இந்தியாவுக்கு எதிரான விடயங்களை உள்ளடக்கிய இந்தக் கடிதத்தை இந்திய அரசின் நலன் கருதி அமெரிக்கா மறைத்து விட்டதாக, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் உள்ள அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் வுட் அதற்கு விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.