தாய்லாந்து தலைநகரில் அவசரநிலை பிரகடனம்!

செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (11:10 IST)
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், அந்நாட்டு பிரதமர் சாமக் சுந்தரவேஜ் ஆதரவாளர்கள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் இடையே கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை நடந்த கலவரத்தில் ஒருவர் பலியானதாகவும், இதையடுத்து அவசரநிலையை பிரதமர் சாமக் சுந்தரவேஜ் பிறப்பித்ததாகவும் அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராணுவத் தளபதியின் கட்டுப்பாட்டில் பாங்காக் நகரம் வந்துள்ளது. ஐந்துக்கும் அதிகமான நபர்கள் பொது இடங்களில் நிற்க கூடாது என்றும், அரசு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எதிரான செய்திகளை ஊடகங்கள் பிரசுரிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாங்காக் நகரில் செயல்படும் அரசு பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தாக்-ஷினுக்கு ஆதரவாக செயல்படும் தற்போதைய பிரதமர் சாமக் சுந்தரவேஜை கண்டித்து ஜனநாயகத்திற்கான ஒருங்கிணைந்த மக்கள் அமைப்பின் (People’s Alliance for Democracy-PAD) சார்பில் கடந்த ஒரு வாரமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்