அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் போட்டி நிலவும்: கருத்துக் கணிப்பு!
திங்கள், 1 செப்டம்பர் 2008 (13:32 IST)
நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமா, குடியரசுக் கட்சி வேட்பாளர் மெக்கெய்ன் இடையே கடுமையான போட்டி நிலவும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சி.என்.என் மற்றும் ஒபீனியன் ரிசர்ஸச் கார்ப் போல் (Opinion Research Corp poll) நிறுவனம் சார்பில் கடந்த வெள்ளி முதல் ஞாயிறு வரை நடத்தப்பட்ட அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளர் ஒபாமா மற்றும் துணை அதிபர் வேட்பாளர் பிடென் ஆகியோருக்கு 48 விழுக்காடு ஆதரவு கிடைத்துள்ளது.
இதேபோல் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் மெக்கெய்ன், துணை அதிபர் வேட்பாளர் ஷரா பாலின் ஆகியோருக்கு 47 விழுக்காடு வாக்காளர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களுக்கு ஒரே ஒரு விழுக்காடு வாக்கு வித்தியாசம் மட்டுமே கருத்துக் கணிப்பில் கிடைத்துள்ளதால், அதிபர் தேர்தலில் கடும் போட்டி நிலவுவது உறுதி என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.